search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி"

    வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி செய்கின்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishna

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் எழுச்சியை காண முடிந்தது. தெருமுனை கூட்டம் போட்டால் கூட 2 ஆயிரம் பேர் கூடுகின்றனர்.

    இதற்கு மத்திய-மாநில அரசு மீதான வெறுப்பு தான் முக்கிய காரணமாகும்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்காக எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஒக்கி புயல், கஜா புயல், வர்தா புயல் எதற்கும் போதிய நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. புயல் சேதத்தையும் வந்து பார்வையிட வில்லை. விலைவாசி உயர்வால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     


    மத்திய அரசை தட்டிக் கேட்கும் நிலையில் மாநில அரசு இல்லை. பிரதமர் மோடி சொல்வதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படியே கேட்கிறார்.

    இதனால் தான் தமிழக மக்களுக்கு மோடி மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்காக அவர் பிரசாரத்துக்கு வந்தாலும் மோடிக்கு ஆதரவான எண்ணம் வரவில்லை. அவர் அடிக்கடி பிரசாரத்துக்கு வருவது எங்களுக்கு நல்லது தான்.

    வேலூர் தொகுதியில் பணம் பிடிபட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகிறது. எங்களுக்கு வரும் செய்தி என்னவென்றால், வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடப்பதாக அறிகிறோம். எங்களது வேண்டுகோள் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishna

    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPM #DMK
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

    இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

    நவாஸ்கனி

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



    அப்போது, திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார்.  #LSPolls #CPM #DMK
    பொதுமக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி அரசையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற தமிழ் பழ மொழியை நிறைவேற்ற வேண்டும் என பிருந்தா காரத் கூறியுள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தன்னை டீ கடை நடத்தியவர் என்றும், அடித்தட்டு மக்களின் நிலையை உணர்ந்தவர் என்றும் கூறுகிறார். கஜா புயலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு புதுக்கோட்டையில் டீ கடை நடத்தி வரும் சிவக்குமார், தனது வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் தான் உண்மையான டீ கடைக்காரர். டெல்லியில் அமர்ந்து இருப்பவர் மோசடி பேர் வழி.

    ரபேல் விவகாரத்தில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் குட்காவில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். 65 ஆண்டுகளாக லாபம் ஈட்டி வந்த பெல் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம்.

    தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள தேர்தல் மூலம் டெல்லியின் புதிய அரசையும், அதே நாளில் 18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் புதிய அரசையும் உருவாக்கும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தலில் மோடியா? இந்த லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவை, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வினர் மறந்து விட்டு இன்று மோடியை டாடி என்று அழைக்கும் அளவுக்கு தாழ்ந்து விட்டனர்.

    5 ஆண்டு கால மோடி ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1.1.கோடி பேர் வேலை இழந்துள்ளனர். கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசு, இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை பாக்கி வைத்துள்ளது. மத்தியில் மதசார்பற்ற, ஊழலற்ற ஆட்சி அமைக்கத்தான் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    பொதுமக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி அரசையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற தமிழ் பழ மொழியை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ரூ.12 லட்சம், புறநகர் மாவட்டம் சார்பில் ரூ.18 லட்சம், கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பில் தலா ரூ.1 லட்சம் பிருந்தா காரத்திடம் வழங்கப்பட்டது. #BrindaKarat
    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் என்று கே பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2 தினங்களில் பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். தமிழக பிரச்சனைக்காக பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது அதே பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் படேல் சிலையை திறந்து வைத்தார். ஆனால் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்புக்கு ரூ.300 கோடி மட்டுமே நிதி வழங்கியுள்ளார். தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும். ஜெயலலிதா தற்போது உயிருடன் இருந்திருந்தால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கமாட்டார்.


    மக்கள் நீதிமய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் டெல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதற்கு தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து வலுவான கூட்டணி அமைப்பது என முடிவு செய்துள்ளதால், தங்களுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பில்லை. நட்புடன் இருப்போம் என்று எங்களது கட்சித்தலைவர்கள் அவருக்கு பதில் அளித்துள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலுடன் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்த வேண்டும். அப்படி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட தொகுதிப் பங்கீடு கோரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishnan #kamal #marxistcommunist

    திருவெள்ளறையில் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    மண்ணச்சநல்லூர்:

    திருவெள்ளறை ஊராட்சிக்கு உட்பட்ட தென்றல் நகர் பகுதியில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. அதேபோல் ,எம்.ஜி.ஆர்.நகர், நேதாஜி நகரில் தார் சாலைகள் அமைக்க வேண்டும், திருவெள்ளறை பேருந்து நிறுத்தம் அருகே நவீன கழிப்பிடம் கட்ட வேண்டும் என்பன மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

    இது போல் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருச்சி மாவட்டத் துணைத்தலைவர் முருகேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    கட்சியின் கிளைச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிதம்பரம், சுப்பிரமணியன், லிங்கராணி, ரவிச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் டைபி அமைப்பின் மாவட்ட பொருளாளர் ஆனைமுத்து நன்றி கூறினார்.
    தமிழகத்திலும் வாக்கு வங்கி சிதறக் கூடாது என்ற நோக்கில் பிரதமர் மோடி மேகதாது விவகாரத்தில் பகல் வேடம் போடுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசினார். #mekedatuissue

    புதுக்கோட்டை:

    பெரியாரின் 45-வது நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெரியாரின் கொள்கைகளையும், சிந்தனைகளையும் அனைவரும் செயல்படுத்த வேண்டும். அவரது கொள்கைக்கு ஏற்ப மதவாத சக்தியை இன்றைக்கு ஒரு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம்.

    மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு பகல் வேடம் போடுகிறது. கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செயல்பட்டு அணை கட்ட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட வைக்கிறார்கள்.

    ஆனால் இன்றைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை வைத்து தமிழகத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாக கூறி பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளனர். பா.ஜ.க.விற்கு கர்நாடகாவிலும் வாக்கு வங்கி போகக்கூடாது. தமிழகத்திலும் வாக்கு வங்கி சிதறக் கூடாது என்ற நோக்கில் தான் மோடி மேகதாது விவகாரத்தில் பகல் வேடம் போடுகிறார்.

    ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்ற தி.மு.க. வின் நிலைப்பாட்டை மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதை அனைத்து கட்சிகளும் மறுக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்து தான் வேறு கட்சிகள் பிரதமர் வேட்பாளரை யாரும் முன்மொழியவில்லை.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் இறந்தவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தான் தெரிய வருகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இன்றைக்கு கூடும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட், மேகதாது அணை பிரச்சினைகள் தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றமே தடையில்லை என்று கூறிய பிறகு வேண்டு மென்றே மோடியின் அனும திக்காக ஆளுநர் காத்திருக்கி றார். உடனடியாக இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் ஆணை பிறப்பிக்க வேண்டும்.

    வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். எவ்வளவுதான் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரசாரம் செய்தாலும் மக்கள் பா.ஜ.க.வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    கஜா புயல் நிவாரண பணிகளில் அரசு முழு கவனம் செலுத்தவில்லை. அரசு என்று ஒன்று இருப்பதாகவே இன்றைக்கு தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்று வழங்கக் கூடாது, நஷ்டஈடு என்று கூறி அதிக தொகை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #mekedatuissue

    இண்டூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபயணம் மேற்கொண்டனர்.
    இண்டூர்:

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர். அதன்படி, மேற்கொண்ட நடைபயணம் ஒரு பகுதியாக இண்டூர் ராமர்கூடலில் இருந்து பரப்பட்டி, பங்குநத்தம், பண்டஅள்ளி, ராஜாகொல்லள்ளி, சோமனஅள்ளி, மல்லாபுரம், தளவாய்அள்ளி, சிறுகலூர், பழைய இண்டூர் ஆகிய கிராமங்கள் வழியாக 30-க்கும் மேற்பட்டோர் 20 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டனர்.

    இறுதியாக, இண்டூரில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் நடை பயணத்தை முடித்து வைத்து பேசினார். நடை பயணத்தின்போது, தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரண பணிகளை செய்ய வேண்டும். காவிரி ஆற்றின் உபரி நீரை மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளிலும் நிரப்பி நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டும். இண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    முன்னதாக இந்த நிகழ்சிக்கு பகுதி செயலாளர் அப்புனு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மல்லையன் நடை பயணத்தை தொடங்கி வைத்தார்.
    கீரமங்கலத்தில் 24-ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம், வாழை ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் மா, பலா மரங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு அரசே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். 

    கல்விக்கடன், விவசாய கடன், மைக்ரோ பைனான்ஸ் கடன் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். மேலும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளில் மீட்டர் கட்டணத்தை ரத்து செய்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி கீரமங்கலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்,  ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடாமல் சபரிமலைக்கு செல்வதா? என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan #BalaKrishnan
    சென்னை:

    மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சபரிமலை சென்றபோது போலீஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் பாதிப்பில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. தமிழ்நாடு முழுவதும் இருந்து அங்குள்ள மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள்.

    அரசு நிர்வாகம் மட்டுமின்றி அரசியல் கட்சியினரும் அங்கு முகாமிட்டு தேவையான உதவிகளை செய்கின்றனர். நான் கூட 3 நாட்கள் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தோம். அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர்.

    ஆனால் மத்திய மந்திரியாக உள்ள பொன்.ராதாகிருஷ்ணன் புயல் பாதித்த பகுதிக்கு செல்லவில்லை. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து புயல் நிவாரண உதவி கேட்ட போது பொன்.ராதாகிருஷ்ணனும் டெல்லி சென்றிருக்க வேண்டும்.

    அதற்கு மாறாக சபரிமலைக்கு சென்று போலீஸ் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்கிறார். இது என்ன நியாயம்? பொன்.ராதா கிருஷ்ணனை போலீஸ் அதிகாரி தடுக்கவில்லை. அவருடன் பின் தொடர்ந்து 50 வாகனங்களில் வந்தவர்களை தான் ஊர்வலமாக விட முடியாது என்றார்.



    குறுகிய மலைப்பாதையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று போலீஸ் அதிகாரி எடுத்து கூறுகிறார். ஆனால் அவருடன் வந்த ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்வதை பொன்.ராதாகிருஷ்ணன் வேடிக்கை பார்க்கிறார். இது நியாயமா?

    ஒன்றுமில்லாத இந்த பிரச்சனைக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடையடைப்பு நடத்த வைக்கிறார். இது தேவையா? புயல் பாதிப்பை திசை திருப்பும் செயலாகத்தான் இதை கருத வேண்டி உள்ளது.

    அவர் சபரிமலைக்கு செல்வதை நான் குறை கூறவில்லை. அது அவரது தனிப்பட்ட விசயம். ஆனால் புயல் பாதிப்பில் 12 மாவட்டங்கள் சீர்குலைந்து கிடக்கும் நிலையில் அந்த மாவட்ட மக்களுக்கு உதவாமல் சபரிமலை சென்று சர்ச்சையில் ஈடுபடுவது நியாயமா? என்றுதான் கேட்கிறோம்.

    மக்கள் மீது அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் சபரிமலை பயணத்தை ரத்து செய்து விட்டு பிரதமரை சந்தித்து தமிழக நிவாரணத்துக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி இருக்க வேண்டும். அதை பொன்.ராதாகிருஷ்ணன் செய்யவில்லை.

    இந்த விசயத்தில் பொன். ராதாகிருஷ்ணன் நடந்து கொண்ட செயல் முழுக்க முழுக்க சரியில்லை.

    இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #BalaKrishnan #Sabarimala
    கேரளாவில் கடந்த 2008-ம் ஆண்டு பா.ஜ.க. கட்சியில் இணைந்ததற்காக ஆட்டோ ஓட்டுனர் கொல்லப்பட்ட வழக்கில், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் தலச்சேரி பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்தவர் சித்தாரிபரம்பில் மகேஷ். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்துவந்தார். இதையடுத்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இவர் 2008-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அவர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். 2008-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை வழக்கு தலச்சேரி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 11 பேரை குற்றவாளிகள் என ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தலச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #Kerala
    ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார் என்று திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது :-

    மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசு மற்றும் அ.தி.மு.க. அரசை அகற்றும் நோக்கத்துடன் மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்குகிறது.

    இதன் நிறைவு நாள் கூட்டம் திருச்சியில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார். மத்திய அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் கூட நடக்கவில்லை.

    ஜூன்.12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. நீட் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ரத்து செய்ய போராட வேண்டும். இதற்கு தற்கொலைகள் தீர்வு ஆகாது.

    தமிழக அரசின் தொழிற்துறை மானியக் கோரிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவை தான் இதற்கு காரணம்.

    தூத்துக்குடி துப்பாக்கி சுடும் சம்பவத்தில் ரஜினியின் கருத்து மக்களுக்கு எதிராக உள்ளது. மக்களை இழிவுப்படுத்திய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார்.

    கமல் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது மூலம் அந்த அமைப்பிற்கு சமூக அந்தஸ்தை கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் சகிப்பின்மையை பற்றி பேசுவது மதுக்கடையில் இருந்து கொண்டு மதுபானத்திற்கு எதிராக பிரசாரம் செய்வது போன்றது.

    இதில் அவர் பங்கேற்றிருக்க கூடாது. பா.ஜ.க.வை வீழ்த்த மதசார்ப்பற்ற கட்சிகளோடு தேர்தல் நேரத்தில் கைகோர்ப்பது என்கிற முடிவை எடுத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அதற்கான யுக்தியை கையாள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth
    மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    கும்பகோணம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்றதை தொடர்ந்து அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசாரின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்ப போலீஸ் படையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி உள்ளது. இந்த நடவடிக்கை போதாது.

    கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை கணக்கிட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதியின் நேரடி கண்காணிப்பில் மத்திய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. மூலமாகவும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்ப வேண்டுமே தவிர கைது செய்ய கூடாது.

    மாநில அரசின் தவறான கொள்கை காரணமாக உயர்கல்வி துறையில் 95 சதவீதம் தனியாரிடம் சென்றுவிட்டது. மத்திய திட்டக் குழுவின் அறிக்கையின்படி தமிழகத்தில் உள்ள 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை தமிழக அரசு மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்திருக்கிறது. பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி விட்டது.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பிரசார பயணம் வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 14-ந் தேதி திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம்யெச்சூரி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், சின்னைபாண்டியன், ஜெயபால் மற்றும் பலர் உடன் இருந்தனர். #GRamakrishnan
    ×